எங்கள் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கையில் மாற்றங்களைச் செய்கிறோம்
WhatsApp-இல் பிசினஸ்களுக்கும் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் செய்தி அனுப்புவது தொடர்பான எங்கள் சேவை விதிமுறைகளிலும் தனியுரிமைக் கொள்கையிலும் மாற்றங்களைச் செய்கிறோம். தரவை எவ்வாறு சேகரிக்கிறோம், பகிர்கிறோம் பயன்படுத்துகிறோம் ஆகியவை பற்றிய கூடுதல் தகவல்களையும் நாங்கள் வழங்குகிறோம்.
உங்கள் தனியுரிமை மீதான எங்கள் உறுதிப்பாடு ஒருபோதும் மாறுவதில்லை. உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள் தொடர்ந்து முழு மறையாக்கத்துடன் பாதுகாக்கப்படுகின்றன. அதாவது WhatsApp அல்லது Facebook உட்பட, உங்கள் அரட்டைகளில் பங்கேற்காத எவராலும் அவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியாது.
இந்த மாற்றங்கள் குறித்து உங்களுக்குத் தெளிவாக விளக்குவது எங்கள் பொறுப்பாகும். நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை:
எவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?

தொலைபேசி, மின்னஞ்சல் போன்ற தகவல் தொடர்பு முறைகளுடன் ஒப்பிடும்போது, உங்களுக்குத் தேவையான காரியங்களை விரைவாகச் செய்ய WhatsApp-இல் நீங்கள் அதிகமான பிசினஸ்களுடன் தொடர்பு கொள்ள முடியும். இது முற்றிலும் உங்கள் விருப்பம் சார்ந்தது.
தினமும் லட்சக்கணக்கானோர் சிறிய மற்றும் பெரிய அளவிலான பிசினஸ்களை WhatsApp மூலம் தொடர்பு கொள்கின்றனர். ஒரு செய்தி அனுப்புவதன் மூலம் பிசினஸ்களிடம் கேள்வி கேட்கலாம், பொருட்கள் வாங்கலாம், தகவல்களைப் பெறலாம். WhatsApp-இல் நீங்கள் ஒரு பிசினஸுடன் உரையாட வேண்டுமா வேண்டாமா என்பது முற்றிலும் உங்கள் விருப்பம் சார்ந்தது. பிசினஸ்களை நீங்கள் தடுத்துக் கொள்ளலாம் அல்லது தொடர்புப் பட்டியலிலிருந்து அகற்றிக் கொள்ளலாம்.
ஏர்லைன் நிறுவனம் அல்லது சில்லறை விற்பனையாளர் போன்ற பெரிய பிசினஸ்களுக்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடமிருந்து செய்திகள் வரக்கூடும் (எ.கா: விமானம் குறித்த தகவல்கள், ஆர்டர் டிராக்கிங் தொடர்பான தகவல்கள்). இதுபோன்ற பிசினஸ்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பதிலளிக்க முடிவதை உறுதிப்படுத்துவதற்காக, தங்களின் சார்பாகச் சில பதில்களை அனுப்புவதற்கு Facebook-ஐ ஒரு தொழில்நுட்ப வழங்குநராக அவர்கள் பயன்படுத்தலாம். அவ்வாறு நிகழும்போது, அதுகுறித்த லேபிளை உரையாடல்களில் இடம்பெறச் செய்து உங்களுக்குத் தெரிவிப்போம்.

தரவை எவ்வாறு சேகரிக்கிறோம், பகிர்கிறோம் பயன்படுத்துகிறோம் ஆகியவை குறித்து மேலும் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.
மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள எங்கள் தனியுரிமைக் கொள்கையில், உங்கள் தகவல்களை நாங்கள் எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பது குறித்து மேலும் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். எங்கள் தனியுரிமைக் கொள்கையின் குறிப்பிட்ட சில பிரிவுகளில் விரிவான தகவல்களைச் சேர்த்துள்ளோம், புதிதாகச் சில பிரிவுகளையும் சேர்த்துள்ளோம். தனியுரிமைக் கொள்கைப் பக்கத்தின் தளவமைப்பையும் எளிதாக்கியுள்ளோம், பயனர்கள் உலாவ இது வசதியாகவும் சுலபமாகவும் இருக்கும்.
உங்கள் WhatsApp கணக்கு தொடர்பான தகவல்கள் மற்றும் அமைப்புகளின் அறிக்கையை இங்கே பதிவிறக்கிக் கொள்ளலாம்.
எவற்றில் மாற்றங்கள் செய்யப்படவில்லை

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான உங்கள் தனிப்பட்ட செய்திகளின் தனியுரிமையும் பாதுகாப்பும் தொடர்பாக ஒருபோதும் மாற்றங்கள் செய்யப்படாது
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் பகிரும் உள்ளடக்கத்தை WhatsApp அல்லது Facebook-ஆல் பார்க்க முடியாது. உங்கள் தனிப்பட்ட செய்திகள் மற்றும் அழைப்புகள், நீங்கள் பகிரும் இணைப்புகள், நீங்கள் அனுப்பும் இடம் போன்றவை இதில் அடங்கும். செய்தியனுப்புபவர்கள் அல்லது அழைப்பவர்கள் குறித்த எந்தப் பதிவுகளையும் நாங்கள் சேமிப்பதில்லை, Facebook உடன் உங்கள் தொடர்புகளை WhatsApp பகிர்வதில்லை.

முழுக் கட்டுப்பாடும் உங்கள் கையில். ஒரு பிசினஸுடன் உங்கள் எண்ணைப் பகிர்வதா வேண்டாமா என முடிவெடுப்பது உங்கள் விருப்பம் சார்ந்ததாகும். எப்போது வேண்டுமானாலும் ஒரு பிசினஸை நீங்கள் தடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் எண்ணை ஒரு பிசினஸுக்கு WhatsApp வழங்காது. உங்கள் ஒப்புதல் இல்லாமல் பிசினஸ்கள் உங்களை WhatsApp-இல் தொடர்பு கொள்வதை எங்கள் கொள்கைகள் தடைசெய்கின்றன.
எங்கள் கூடுதல் தனியுரிமை அம்சங்கள் (உங்கள் செய்திகளை மறையச் செய்வது, குழுக்களில் உங்களை யார் சேர்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்துவது போன்றவை) தனியுரிமைக்கு ஒரு கூடுதல் பாதுகாப்புக் கவசத்தை வழங்குகின்றன.

புதிய சேவை விதிமுறைகளை நீங்கள் ஏற்பது, WhatsApp தனது தாய் நிறுவனமான Facebook நிறுவனத்திற்குத் தரவைப் பகிரும் திறனை அதிகரிக்காது.
மேலும் தகவல்களுக்கு, எங்களின் விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையைப் பாருங்கள். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இங்கே பார்க்கலாம்.